நேருவிடம் செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன: திருவாவடுதுறை ஆதீனம்

சென்னை: திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் நேற்று மாலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு விடுதலை அடைந்த பின், 1947ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது என்பது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று திருவாவடுதுறை ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளன. நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாக தெரிவித்தார்.

நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடி பெட்டியில் இருந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக சடங்குகள், நிகழ்வுகளை பொய், போலி என கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அரசு, நீதி மாறாமல் இருக்க செங்கோல் தரப்படுகிறது. 28ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியின்போதுதான், தேவாரம் ஓதப்படுமா என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நேருவிடம் செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன: திருவாவடுதுறை ஆதீனம் appeared first on Dinakaran.

Related Stories: