பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?.. சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த புமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்; தஞ்சையில், டாஸ்மாக் அருகில் உள்ள பாரில் மது குடித்த இருவர் இறந்துள்ளனர். சில தினங்களுக்கு முன், விழுப்புரம், மதுராந்தகத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 23 பேர் உயிரிழந்தனர். இவர்கள், ஏழை எளிய கூலித் தொழிலாளிகள். டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில், காலி பாட்டில்களை சேகரிக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கு, மது விற்கவோ, இருப்பு வைக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில், தடையின்றி மதுபான விற்பனை நடக்கிறது. இங்கு, தரமற்ற மது வகைகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. எனவே, டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் வாயிலாக விற்கப்படும் மதுபானங்கள் தரமானவையா, குடிப்பதற்கு உகந்தது தானா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபான வகைகள் தரமானதா என்பதை சோதனை செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; டாஸ்மாக் மதுபான வணிகத்தை எப்படி நடத்துவது என்று அரசுக்கு தெரியும். பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை விதிக்க கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி தரத்தை உறுதிபடுத்தும் வரை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடைவிதிக்க முடியும்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 2வது வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

The post பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?.. சென்னை ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: