குன்னூரில் வனப்பகுதியில் 57 ஏக்கர் யானை வழித்தடம் அழிப்பு: மா, பலா, ஈட்டி, சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

குன்னூர்: குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே யானை வழித்தடத்தை அழித்து சுமார் 57 ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி சாலை அமைத்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மா, பலா, ஈட்டி, சந்தன மரங்களை காட்டு தீ வைத்து வெட்டி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும். காடுகள் வளர்ச்சிக்கு யானைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலைக் காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது. சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால் சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கின்றன.

மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதி அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கு வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குரும்பாடி பழங்குடியின கிராமம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மத்தியில் இது அமைந்துள்ளதால் யானைகள் மற்றும் வன விலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றன. அடர்ந்த சோலை மரக்காடு என்பதால் இங்கு மா,பலா, ஈட்டி, சந்தனம் மரங்கள் ஏராளமாக உள்ளன.

இங்கு தனியார் சிலர் உரிய அனுமதியின்றி சுமார் 57 ஏக்கர் நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைத்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை காட்டு தீ வைத்து அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட மா, பலா, ஈட்டி மற்றும் சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். யானை வழித்தடத்தை அழித்து பல கிளைகளாக சாலை அமைத்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதி இவர்களின் நடவடிக்கையால் அழிந்து வருகிறது. யானைகள் வழித்தடத்தை அழித்ததால் யானைகள் சென்று வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு வெட்டி கடத்தப்பட்ட மரங்கள் மற்றும் அனுமதியின்றி யானை வழித்தடத்தை அழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: உயிர் சூழல் மண்டலமாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் யானைகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. முந்தைய சந்ததிகள் கற்பித்த வழித்தடத்தை பின்பற்றியே யானைகள் சென்று வரும். குன்னூரை பொறுத்த வரை கல்லார் முதல் காட்டேரி வரை அடர்ந்த பள்ளத்தாக்கு பகுதியாகும். அடர்ந்த வனப்பகுதியில் மத்தியில் யானை, சிறுத்தை, கரடிகள் மற்றும் பறவைகள் ஏராளமாக உள்ளன. ஒரு சில தனியார் காட்டேஜ் மற்றும் ரிசார்ட் கட்ட வனப்பகுதியை அழித்து வருகின்றனர். சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் அதிகம் வழங்குவதால் தொழில் முனைப்பில் வனப்பகுதியை அழித்து வருகின்றனர்.

தற்போது குரும்பாடி பகுதியில் சுமார் 57 ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி சாலை அமைத்து யானை வழித்தடத்தை அழித்துள்ளனர். அது மட்டுமின்றி நூற்றாண்டு பழமையான மரங்களை காட்டு தீ வைத்து அழித்துள்ளனர். இந்த சம்பவம் வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளின் வழித்தடத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post குன்னூரில் வனப்பகுதியில் 57 ஏக்கர் யானை வழித்தடம் அழிப்பு: மா, பலா, ஈட்டி, சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: