மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் பாஜ எம்பியை கைது செய்ய வேண்டும்-இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மனு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், பாலியல் பாதிப்பிற்குள்ளாகி டெல்லியில் நியாயம் கேட்டும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் போராடி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இதில் சம்பந்தப்பட்ட பாஜ எம்பி பிரிஜ்பூசன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும். பதவி நீக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.முன்னதாக, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய வேட்டி மற்றும் சேலைகளை கலெக்டர் மூலமாக பிரதமருக்கு அனுப்ப வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.திருப்பூரை சேர்ந்த குமார் அளித்த மனுவில், 2 கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியாக நான் குடும்பத்துடன் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறேன்.

குடும்ப செலவுகளை மேற்கொள்ளவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவினாசி அய்யம்பாளையம் கானாங்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பெரும்பாலும் கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இதுபோல், பலரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

The post மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் பாஜ எம்பியை கைது செய்ய வேண்டும்-இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மனு appeared first on Dinakaran.

Related Stories: