தேவர் சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 

கூடலூர், மே 23: நீலகிரி மாவட்டம், தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சுகுன்னு சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் நடைபாதை, மின்விளக்கு, குடிநீர், சிமெண்ட் சாலை, தார் சாலை உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், அஞ்சு குன்னு சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சாலைவசதி மற்றும் தெரு விளக்குகள் இல்லாத சூழ்நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மேலும் மிகவும் பழுதான சாலைகளில் எந்த வாகனங்களும் இயக்க முடியாத காரணத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி சார்பாக உறுதி அளித்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக இந்த சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறாவிட்டல் மீண்டும் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தினருடன், மசினகுடி இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன், தேவர் சோலை எஸ்ஐ கபில்தேவ், சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பொது மக்களின் பிரச்னை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொது மக்களின் குறைகளை எடுத்து சொல்வதாக உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டு கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கி கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post தேவர் சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: