இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையினை வகுக்க தமிழ்நாடு அரசு உறுதிப் பூண்டுள்ளது. இதற்கென, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை கடந்தாண்டு ஜூன் 1ம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடந்த ஓராண்டு காலமாக இக்குழு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டப் பலருடனும் தனித்தனியான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
குழுவின் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை. குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன், தலைமையில், தமிழ்நாட்டிற்கென ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில், ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் குழு செயல்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த குழுவின் செயல்பாடுகள் மீது அரசு முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. மேலும், இந்த உயர்மட்டக் குழுவில் கீழ்க்காணும் இரு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ப்ரீடா ஞானராணி, தமிழ் இலக்கியத்துறை தலைவர் பழனி ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர். மேலும், குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி குழு 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும். இந்த குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கென சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும்.
The post தேசியக்கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை appeared first on Dinakaran.