ஊட்டி 200 விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.10 கோடி ஒதுக்கீடு

 

ஊட்டி, மே 20: ஊட்டி 200 விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு, நீலகிரி எம்பி ராசா நன்றி தெரிவித்தார். ஊட்டியில் நேற்று 125வது மலர் கண்காட்சி விழா நடந்தது. விழாவில், நீலகிரி எம்பி ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தை கண்டறிந்து 200 ஆண்டுகள் ஆன நிலையில், ஊட்டி 200 விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தோம். இது குறித்து தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டவுடன் ஊட்டி 200 விழாவை சிறப்பாக கொண்டாடவும், ஊட்டி நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

மேலும், கடந்த ஆண்டு மலர் கண்காட்சியின் போது, ஊட்டிக்கு வந்த அவர், மலர் கண்காட்சியை துவக்கி வைத்து, ஊட்டியை வெளி உலகத்திற்கு காட்டிய முன்னாள் கலெக்டர் ஜான் சல்லிவன் சிலையையும் திறந்து வைத்தார். ஜான் சல்லிவன், நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டது மட்டுமின்றி, இந்திய மக்களுக்கு அப்போதே பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இது போன்று சிறந்த மனிதர்கள் இருந்துள்ளனர். எனவே, அவர்களது வாரிசுகளை அழைத்து ஊட்டி 200வது விழாவில் கவுரவிப்பதில் பெருமையடைகிறேன்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊட்டி மலர் கண்காட்சியை காண வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஊட்டி 200 விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.10 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: