நட்டக்கல் பகுதியில் படுகர் தின விழா

 

கோத்தகிரி: கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் படுகர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என நான்கு சீமைக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி படுகர் தினத்தையொட்டி பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

19 ஊர்த் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆயிரம் வீடு தலைவர் சீராளன், பார்ப்பத்தி ஆலா கவுடர், எட்டுர் தலைவர் ஆலா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைதியை போற்றும் வகையில் வெள்ளை கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் படுகர் மக்களின் பாடல்கள் எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், பாட்டு பாடியவர்கள், பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படுக இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், நடைபெற்று தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

The post நட்டக்கல் பகுதியில் படுகர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: