செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த வசந்தா, சின்னதம்பி, மாரியப்பன், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மற்றும் சந்திரா ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* ‘கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டிருப்பதாவது: கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது என ஆய்வுக்கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும், மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக்கரம் கொண்டு செயலாற்றும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: