பயறு வகைகளில் அதிக விளைச்சல் கிடைத்திட டிஏபி கரைசல் தேவை வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

 

பழநி: பயிறு வகைகளில் அதிக விளைச்சல் பெற்றிட டிஏபி கரைசல் பயன்படுத்த வேண்டுமென வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பயறு வகைகளில் தரமான மணிகளை விளைச்சலாக பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தரமான பயறுகளை பெற்றிடவும், கூடுதல் மகசூல் கிடைக்கவும் டிஏபி கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டிஏபி உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், மறுநாள் மாலை ஊற வைத்த கரைசலில் இருந்து தெளிந்த நீரை வடித்து எடுத்து அதனை 190 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாக பூக்கும் தருவாயில் ஒரு முறையும். மறுமுறை மேற்கூறிய முறையில் மீண்டும் 10 முதல் 15 நாள் இடைவெளியில் கைத்தெளிப்பான் மூலமாக 200 லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலமாக அதிகப்படியான பூக்களும், திறட்சியான மணிகளும் நல்ல விளைச்சலும் பெறலாம். தற்சமயம் டிஏபி கரைசல் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் உரிய மானிய விண்ணப்பம் பெற்று வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post பயறு வகைகளில் அதிக விளைச்சல் கிடைத்திட டிஏபி கரைசல் தேவை வேளாண் அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: