காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் நன்கொடை வழங்கிய மாற்றுத்திறனாளி சகோதரிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தியிடம், மாற்றுத்திறனாளி சகோதரிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இதில், மாற்றுத்திறனாளிகளாக உள்ள சகோதரிகள் இருவரும் தங்களது சேமிப்பு தொகையில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் பணத்தை, கலெக்டர் ஆர்த்தியிடம் வழங்கினர். காஞ்சிபுரம் அருகே களியனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் வடிவுக்கரசி ஆறுமுகம். இவரது பெண் குழந்தைகளான ஜென்னி (19), சாவித்திரி (15). இருவரும், பிறவியிலிருந்தே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள். இதில், ஜென்னி சென்னையில் காது கேளாதோர் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், சாவித்திரி காஞ்சிபுரம் காது கேளாதோர் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகை தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரத்தை காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் வழங்கினர். அப்போது, இத்தொகையினை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செலவிடுமாறும், அவர்கள் சைகையில் கலெக்டரிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கு, கலெக்டர் இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது, இச்சகோதரிகளின் தந்தை ஆறுமுகம், தாயார் வடிவுக்கரசி ஆகியோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் நன்கொடை வழங்கிய மாற்றுத்திறனாளி சகோதரிகள் appeared first on Dinakaran.

Related Stories: