குறுக்குபாறை பள்ளத்தில் கருப்பன் யானையை ட்ரோன் மூலம் தேடும் பணி: கும்கியுடன் வனத்துறையினர் தீவிரம்

கோபி: கோபி அருகே குறுக்குபாறை பள்ளத்தில் கருப்பன் யானையின் இருப்பிடத்தை கண்டறிய வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமாக தேடி வருகின்றனர். கோபி அருகே உள்ள பவானி ஆற்றில் காட்டு யானை இருப்பது குறித்து கிராம மக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது, வாழைத்தோட்டத்தில் இருந்த துரையன் என்ற கூலித்தொழிலாளியை யானை மிதித்து கொன்றது. அதைத்தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்த போது, கடந்த 17ம் தேதி தாளவாடியில் இருந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தட்டகரை பகுதியில் தமிழக, கர்நாடக வன எல்லையில் விட்டு வந்ததும், அதைத்தொடர்ந்து கருப்பன் யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல், வேலம்பட்டி ஓடை வழியாக சஞ்சீவராயன் குளத்தை அடைந்ததும், அதைத்தொடர்ந்து கருப்பன் யானை அடசப்பாளையம் கிராமத்திற்கு வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கருப்பன் யானையை வனபகுதிக்குள் விரட்ட முடியாது என்பதால் கும்கி யானைகள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டு, முதுமலையில் இருந்து பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.இந்நிலையில் கருப்பன் யானை, பவானி ஆற்றங்கரையில் இருந்து மீண்டும் சஞ்சீவராயன் குளம் பகுதிக்கு சென்றது. அதைத்தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க முயற்சித்த போது, கருப்பன் யானை அங்கிருந்து மறைந்தது. அதனால், கருப்பன் யானையை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தலைமையில், வனவர் பழனிச்சாமி, விளாமுண்டி வனசரக வன காப்பாளர் ஹரி விக்னேஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறையினர் குறுக்கு பள்ளம், வேதபாறை பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலமாக யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அந்த பகுதி முழுவதும் நேற்று காலை முதல் ட்ரோன் கேமரா மூலமாக தேடியும், கிடைக்கவில்லை. இதற்கிடையே குறுக்கு பள்ளம் என்ற இடத்தில் உள்ள மழை நீர் ஓடையில் யானையின் காலடித்தடம் இருக்கவே, அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, கருப்பன் யானை நேற்று முன் தினம் விவசாய நிலத்தில் இருந்த பயிர்களை தின்றுள்ள நிலையில் நேற்று முழுவதும் கருப்பன் யானை நடமாட்டத்தை கண்டறிய முடியவில்லை. இதனால் நாளை (இன்று) உணவிற்காக மறைவில் இருந்து கருப்பன் மீண்டும் வெளியே வரும் வாய்ப்பு உள்ளதால், சஞ்சீவரயான் குளம், பகவதிநகர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள், தொழிலாளர்கள் விவசாய நிலத்திற்குள் செல்வதை தவிர்ப்பதோடு, தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

The post குறுக்குபாறை பள்ளத்தில் கருப்பன் யானையை ட்ரோன் மூலம் தேடும் பணி: கும்கியுடன் வனத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: