திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு நிறைவு, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரையும் வெளியிட்டார்.

திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான், இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும்.

விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன், நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன், இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு நிறைவு, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: