அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் `வசந்த உற்சவம்’ துவக்கம்

நெல்லை, மே 7: அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 11 நாள் கொண்டாடப்படும் வசந்த உற்சவம் நேற்று துவங்கியது. இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். வசந்த உற்சவம் வரும் 16ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (6ம் தேதி) வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் உள்ள தெப்ப மண்டபமான வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து தண்ணீர் நிரப்பப்பட்ட கல் தெப்பத்தின் மைய பகுதியில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமி- அம்பாளை தரிசித்தனர். கோடை காலத்தை முன்னிட்டு கோடைக்கு உகந்த வெள்ளரி, பானகரம் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் பஞ்சாமிர்தம், புளியோதரை, பொங்கல் உள்ளிட்டவை சுவாமி, அம்பாளுக்கு பிரசாதமாக படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. வரும் 16ம் தேதி வரை இவ்விழா தொடர்ந்து 11 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி செய்துள்ளார்.

The post அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் `வசந்த உற்சவம்’ துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: