கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நீர் திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்கவேண்டும். தெலுங்கு-கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடலாம். இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி, கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு முதலில் 500 கன அடியும், பின்னர் படிப்படியாக உயர்த்தி 2 ஆயிரத்து 300 கன அடியாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் கண்டலேறு தண்ணீர் ஆந்திர விவசாயிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த தண்ணீர் தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை-தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு வெறும் 11 கனஅடி வீதம் மட்டுமே நேற்று காலை வந்தது. மேலும் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம் பகுதியில் ரூ.23 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதால் தற்காலிகமாக இந்த தண்ணீரை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர். ஜீரோ பாயிண்டில் தண்ணீர்வரத்து அதிகமானால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு திருப்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நீர் திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: