பெரியார் நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா

 

மஞ்சூர், மே 3: பெரியார்நகர் முத்து மாரியம்மன் கோயில் 22ம் ஆண்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கினார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பெரியார்நகரில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 30ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 22ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா கடந்த 28ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இதை தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாபிஷேகம் மற்றும் கரியமலை காளியம்மன் கோயிலில் இருந்து கரகம் ஜோடிக்கப்பட்டு தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கணபதி, முத்து மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. உடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்குகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதை தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்தார்கள். பலர் அலகுகளை குத்தியபடி குண்டத்தில் இறங்கினார்கள். இதைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை மஞ்சள் நீராடுதல், அம்மன் குடிவிடுதல் நடைபெற்றது. மேலும் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post பெரியார் நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: