மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வடக்கு ஆடி, மேள ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரர் சுவாமியும் எழுந்தருளினர்.

சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் சுவாமிக்கும் அம்மனுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் பிரதிநிதிகளாக இருந்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து வேத, மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் வாசிக்க மீனாட்சி அம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கள
நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர்.

திருக்கல்யாண நிகழ்வை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் தீப ஆராதனைகள் காட்டப்பட்டு ஓதுவார்களால் பல்வேறு திருமுறைகள் ஓதப்பட்டது. திருக்கல்யாண மேடை மதுரை மல்லி, திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாசனை மிகுந்த வண்ண மலர்கள் மற்றும் 500 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை பள்ளி வளாகத்தில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அறுசுவை உணவை உண்ட மகிழ்வோடு பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதி பிரசாதங்களை பெற்று தந்தனர். பெண்கள் புதிதாக திருமாங்கல்ய சரடு மாற்றி மகிழ்ந்தனர். விழாவை ஒட்டி விரிவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம் appeared first on Dinakaran.

Related Stories: