வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற கோரி முதல்வருக்கு பாமகவினர் மனுக்கள் தபால் மூலம் அனுப்பினர்

 

அரியலூர்: அரியலூர் தலைமை தபால் நிலையத்தில், தமிழக முதல்வர் மற்றும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஆகியோருக்கு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி பாமகவினர் மனுக்களை தபால் மூலம் நேற்று அனுப்பினர். அரியலூரில் பாமக மாவட்டச் செயலாளர் ரவிசங்கர் தலைமையில், கவுரத்தலைவரும் எம்எல்ஏவுமான கோ.க.மணி முன்னிலையில், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் தர்ம.பிரகாஷ், மாவட்டத் தலைவர் சின்னத்துரை, நகரச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே.31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்ற சுமார் 10 ஆயிரம் மனுக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பாரதிதாசன் ஆகியோருக்கு தபால் மூலம் நேற்று அனுப்பினர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு கோ.க.மணி அளித்த பேட்டி:வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்து ஓராண்டாகியும் இதுவரை சட்டம் இயற்றப்படவில்லை. உடனடியாக இச்சட்டத்தை நிறைவேற்றினால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் பலனடைவர். தமிழகத்தில் பெய்யும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் அனைத்து ஆறுகளிலும் 5கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த கூடாது. இதனை பாமக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்க்கின்றன என்றார்.

The post வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற கோரி முதல்வருக்கு பாமகவினர் மனுக்கள் தபால் மூலம் அனுப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: