தென்னக ரயில்வேயில் 22வது இடம்; நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய வருமானம் ரூ70.26 கோடி: கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய வருமானம் ரூ.70.26 கோடியாக அதிகரித்துள்ளது. வருமானத்தின் அடிப்படையில் தென்னக ரயில்வேயில் 22 வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே கன்னியாகுமரி மற்றும் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் இயக்கபட வேண்டும் என்பது குமரி மக்களின் கோரிக்கை ஆகும்.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில், தமிழக ரயில் நிலையங்கள் மூலமாக மிகக்குறைந்த அளவு ரயில்கள் இயக்கி அதிகப்படியான ஆண்டு வருமானம் பெற்றுக்கொடுக்கும் பட்டியலில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கோட்ட அளவில் 7வது இடத்தில் உள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது பிளாட்பாரம் 1, 1ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 5 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் பிட் லைன்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது. மறுசீரமைப்பதற்கான பணிக்கான டெண்டர் ரூ.49.36 கோடியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம், பயணிகளுக்கு எதிர்கால உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் மறுசீரமைப்புக்கு பின்னர் விமான நிலையம் போன்ற அனுபவத்தை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அடுத்த 40 முதல் 60 ஆண்டுகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இடம்பெறும். தனித்தனி வருகை மற்றும் புறப்பாடு நடைபாதை மூலம் பயணிகளின் தடையற்ற இயக்கம் உறுதிப்படுத்தப்படும். முகப்பில் விளக்கு ஏற்பாடுகள், நல்ல வெளிச்சம் மற்றும் இயற்கையை ரசித்தல் ஆகியவற்றுடன் அழகிய முறையில் நிலையம் வடிவமைக்கப்படும்.

பல்வேறு வகை வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பிரத்யேக பாதைகளில் செல்லும் வகையில் பல நிலை வாகன நிறுத்துமிடங்களில் சாத்தியமான இடங்களில் நெறிப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இன்டர்-மாடல் இணைப்பு வழங்கப்படும். எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள், படிக்கட்டுகள், ஸ்கைவாக்குகள் மூலம் அனைத்து தளங்களுக்கும் பயணிகள் சிரமம் இல்லாமல் செல்ல இயலும். விசாலமான கான்கோர்ஸ் (கூரை பிளாசா), காத்திருப்பு அரங்குகள், ஒலியால் வடிவமைக்கப்பட்ட மற்றும் அமைதியான பொது அறிவிப்பு அமைப்பு, சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுப் பகுதியையும் கண்காணிப்பு செய்ய இயலும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற நவீன வசதிகள் இடம்பெறும்.

திறமையான நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மை நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 2023 ம் ஆண்டில் தென்னக ரயில்வேயில் வருமானத்தின் அடிப்படையில் முதல் 50 இடங்களை பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் சென்னை சென்ட்ரல் இடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2 வது மற்றும் 3 இடங்களை சென்னை எழும்பூர், கோவை சந்திப்பு ரயில் நிலையங்கள் பிடித்திருக்கின்றன. அந்த வகையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 22 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு வருமானம் ரூ.70 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.

வருமானத்தில் அடிப்படையில் முதல் 50 இடங்களில் 22 வது இடத்தை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் பிடித்துள்ளது. எனவே வருமானத்தின் அடிப்படையை கொண்டு இந்த ரயில் நிலையத்தில் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது வருமானம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறினர்.

The post தென்னக ரயில்வேயில் 22வது இடம்; நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய வருமானம் ரூ70.26 கோடி: கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: