பிரபல ரவுடி வெட்டிக்கொலை தொழில் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் தீர்த்துக்கட்டினேன்: கைதான ரியல் எஸ்டேட் புரோக்கர் வாக்குமூலம்

பூந்தமல்லி: சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (எ) முண்டகுட்டி ரமேஷ் (40). இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி, அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான இவர், விருகை தொகுதி முன்னாள் அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள கடையில் இவர், டீ குடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த 2 பேர் இவரை வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க அசோக்நகர் உதவி கமிஷனர் தனசெல்வன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் பழைய நண்பரான ராகேஷ் முன்விரோத தகராறில் ரமேஷை வெட்டி கொன்றது தெரியவந்தது. செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு ராகேஷ் (36), வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த தனா (எ) தனசேகரன் (42), மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தினேஷ் ராஜன் (24), கோடம்பாக்க்ததை சேர்ந்த உதயகுமார் (39), தாம்பரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (37), மீனம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (30) என 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராகேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கொலையான ரமேஷூடன் சிறு வயதில் இருந்து ராகேஷ் நண்பராக இருந்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்த இருவரும், யார் பெரியவன் என்ற போட்டியால் பிரிந்தனர். இந்நிலையில், நிலம் மற்றும் வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் இருந்து ராகேஷ் வாங்கி விற்க முயன்றால், ரமேஷ் இடையில் நுழைந்து எனக்கு தான் நிலம் மற்றும் வீடுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் ராகேஷின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, போதிய வருமானம் இல்லாமல் தவித்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த ராகேஷ், ரவுடி ரமேஷை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, தனது நண்பர்களுடன் திட்டமிட்டு ரமேஷை வெட்டி கொன்றுள்ளார். இவ்வாறு கைதான ராகேஷ் தனது வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post பிரபல ரவுடி வெட்டிக்கொலை தொழில் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் தீர்த்துக்கட்டினேன்: கைதான ரியல் எஸ்டேட் புரோக்கர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: