பவானி, ஏப். 27: பவானி அருகே மேட்டூர் நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற டேங்கர் லாரியை பின்தொடர்ந்து ஜீப்பில் சென்ற போலீசார் துரத்திப் பிடித்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பவானி-மேட்டூர் ரோட்டில் ஒரு டேங்கர் லாரி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. லாரியில் சந்தேகப்படும்படியான குற்றவாளி தப்பிச் செல்வதாக பவானி போலீசாருக்கு சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திலிருந்து போட்டோ மற்றும் செல்போன் எண் அனுப்பப்பட்டது.
செல்போன் எண்ணை டிரேஸ் செய்தனர். மேலும், பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, லாரியில் சென்ற நபர் குருப்பநாயக்கன்பாளையம் அருகே சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.இதனால், பவானியிலிருந்து ஜீப்பில் போலீசாருடன் புறப்பட்டுச் சென்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, குருப்பநாயக்கன்பாளையம் அருகே டேங்கர் லாரியை வழிமறித்து நிறுத்தினர். தொடர்ந்து, லாரியில் சென்ற டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரணை நடத்தியதோடு போட்டோவில் இருந்த நபர் இல்லை என்பதும், செல்போன் எண் மாறியிருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து, கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குற்ற செயல்களில் ஈடுபட்டது வேறு நபர் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் லாரியின் டிரைவரை போலீசார் அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரியை துரத்திச் சென்று, மடக்கிப் பிடித்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post டேங்கர் லாரியில் மின்னல் வேகத்தில் குற்றவாளி தப்பினாரா? appeared first on Dinakaran.
