காட்டுப்பள்ளி துறைமுகம்- சித்தூர் இடையே மின்கம்பம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

பொன்னேரி: தடம்பெரும்பாக்கம் ஏரியிலிருந்து காட்டுப்பள்ளி துறைமுகம் சாலைக்கு, சவுடு மணல் எடுத்து செல்லும்போது, டிப்பர் லாரி திடீரென மின்கம்பம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. பொன்னேரி அருகே தடம்பெரும்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரியில் டிப்பர் லாரி மூலம் சவுடு மணல் எடுத்துக் கொண்டு காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு நேற்றுமதியம் டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஊராட்சி மன்ற அலுவலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அது குறுகலான பாதை என்பதால் எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க ஓரமாக டிரைவர் ஓட்டியுள்ளார். அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது திடீரென மோதியது. இதில், கடந்த ஒருவாரத்திற்கு முன்பே போடப்பட்ட இந்த மின் கம்பம் முறிந்ததில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பின்னர், சாய்ந்து அந்தகரங்கத்தில் தொங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இந்த விபத்தால் மின்கம்பத்தில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள மின் பொருட்கள் சேதம் அடைந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தடபெரும்பாக்கம் ஏரியில் இருந்து சவுடு மணல் எடுக்கப்பட்டு காட்டுப்பள்ளி துறைமுகம்- சித்தூர் இரண்டாவது வெளிவட்ட சாலை பணிக்காக மணல் எடுத்து செல்லப்படுகிறது. அப்படி செல்லும்போது, தினமும் இந்த பகுதியில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது என புகார் தெரிவித்து கூறினர். தகவலறிந்த பொன்னேரி காவல்துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்டுப்பள்ளி துறைமுகம்- சித்தூர் இடையே மின்கம்பம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: