வள்ளலார் முப்பெரும் விழாவுக்கு ரூ.3.25 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3.25 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்தினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் மானியமாக ரூ.3.25 கோடிக்கான காசோலையை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக்குழுவின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2022-2023ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாடிடும் வகையில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு அக்.5ம் தேதி நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவின் தொடக்க விழாவில் “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றும்போது, வள்ளலாரின் முப்பெரும் விழா 52 வாரங்களுக்கு பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது, ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட இந்த விழாவிற்கு ரூ.3 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார்.

அதன்படி, வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானம் செலவினத்திற்காக அரசு மானியமாக ரூ.3.25 கோடிக்கான காசோலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக்குழுவின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு தினந்தோறும் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முரளீதரன், வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வள்ளலார் முப்பெரும் விழாவுக்கு ரூ.3.25 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: