மாநில அரசின் முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில்: முழு ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அறிவிப்பு

சென்னை: மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்குக் கால நிர்ணயம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எழுதிய கடிதத்துக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எழுதிய பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

எனது கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்து முழு ஆதரவு அளித்தமைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி. மாநில சுயாட்சியை பறிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தமிழ்நாடும், கேரளாவும் பாரம்பரியமான அரணாக இருந்து வருகின்றன. ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான அறப்போரிலும் வெற்றி பெறுவோம்.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன். அவை கேரளத்தில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வது குறித்து பொதுமக்கள் ஜனநாயக முறையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தபோது, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு திமுக அளித்த ஆதரவைத் தாம் நினைவு கூருகிறேன். தமிழ்நாடு முதல்வர் சுட்டிக்காட்டியிருப்பதை போல, தற்போது பல மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்கிறது.

கேரளாவிலும், மாநில சட்டப்பேரவையில் உரிய விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சில சட்டமுன்வடிவுகள் ஆளுநரால் நீண்ட காலமாகவும், அவற்றில் சில ஓராண்டிற்கு மேலாகவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, கேரள ஆளுநர் கேட்ட விளக்கங்களை அளித்தும் சட்டமுன்வடிவுகள் இவ்வாறு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மாநிலச் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை நீண்டகாலம் நிலுவையில் வைப்பது என்பது, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிராகரிப்பதற்குச் சமமானது.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், காலதாமதம் செய்வதன் வாயிலாக, மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற ஜனநாயக மரபு மீறப்படுகிறது. அரசியலமைப்பில் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்டுள்ள விருப்புரிமை, குறுகிய வரம்புகளுக்குள் செயல்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, 356-வது பிரிவைப் பயன்படுத்துவதும் ஒரு காலாவதியான கடிதமாக இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்திட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

அது நியாயமானதாக இருக்கவேண்டும். பல மாநிலங்களின் அனுபவத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா ஆணையமும், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எம்.புஞ்சி ஆணையமும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய காலவரம்பைப் பிரிவு 200-ல் குறிப்பிடப் பரிந்துரைத்துள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள பிரச்னையில், தாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்த முன்மொழிவை மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அது நியாயமானதாக இருக்கவேண்டும்.

The post மாநில அரசின் முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில்: முழு ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: