உச்ச நீதிமன்றம் அதிரடி அக்னிபாத் திட்டத்திற்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இவர்களில் 25 சதவீதம் பேர் அவர்களின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பணி நிரந்தரம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதால், இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பல்வேறு அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், விஷால் திவாரி, எம்.எல்.ஷர்மா மற்றும் ஹர்ஷ் அஜய்சிங் ஆகியோர் தொடர்ந்த மூன்று மனுக்களையும் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘அக்னிபாத் திட்டம் ஒன்றிய அரசின் கொள்கை முடிவு சம்பந்தமானது.

விண்ணப்பதாரர்கள் எவரும் முறையிடவில்லை. டெல்லி உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் தெளிவாக உத்தரவிட்டுள்ளது என தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இருப்பினும் இந்திய விமானப்படையில் அக்னிபாத் வீரர்களை சேர்ப்பது தொடர்பான வழக்கை மட்டும் ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post உச்ச நீதிமன்றம் அதிரடி அக்னிபாத் திட்டத்திற்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: