திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே மது கேட்டு 30அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த சைக்கோவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் லேப்பாக்சி சந்திப்பு அருகே 10 அடி உயரத்தில் பெருமாள் சிலை வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜதராபாத்தைச் சேர்ந்த மகேஷ் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனத்திற்காக திருமலைக்கு வந்து மொட்டை அடித்து சுவாமியை வழிபட்டார். இந்நிலையில், மகேஷ் குடும்பத்தினர் லேப்பாக்சி சந்திப்பு அருகே நேற்று மாலை வந்தபோது குடும்பத்தினரிடம் மது வேண்டும் என சண்டையிட்டுள்ளார். குடும்பத்தினர் திருப்பதி சென்று வாங்கி தருவதாக கூறி உள்ளனர். ஆனால் அடம்பிடித்தபடி மகேஷ் அருகில் இருந்த 30 அடி சுவர் மீது நின்று கொண்டு மது வேண்டும் என அடம்பிடித்தார்.
இதனையறிந்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு திரண்டனர். பின்னர், 30 அடி உயரத்தில் இருந்த மகேஷை விஜிலென்ஸ் பாதுகாப்பு வீரர் நரேஷ் (ஊர்காவல் படை) மீட்க முயன்றார். ஆனால் மகேஷ் பாதுகாப்பு வீரர் நரேஷின் கையை பிடித்து கொண்டு கீழே குதித்தார். இதில், நரேஷக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சைக்கோ போன்று ஈடுபட்ட மகேஷ் கை, கால்களை கட்டி மயக்க மருந்து கொடுத்து மருத்துவமனையில் படுக்க வைத்தனர். இதனால் திருமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே மது கேட்டு 30 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த சைக்கோ: மீட்க வந்த விஜிலென்ஸ் வீரர் படுகாயம் appeared first on Dinakaran.