சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே. அண்ணாமலையை ஓரங்கட்டும் நடவடிக்கையை டெல்லி மேலிடம் எடுக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் நேரடியாகவே ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை களம் இறக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டதால், அவர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று பின்னர், பாஜவில் சேர்ந்த அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கட்சிக்கு வந்து 8 மாதத்திலேயே அவர் பதவியில் நியமிக்கப்பட்டது மூத்த நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும். அமைதியாக வேலைகளை செய்தனர். அதன்பின்னர் மூத்த நிர்வாகிகளை அவர் ஓரங்கட்ட ஆரம்பித்தார்.
இந்நிலையில், கூட்டணிக் கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் டெல்லி மேலிடமோ, நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் முக்கியம். இதனால், ஒரு சீட் கிடைத்தாலும் நமக்கு நல்லது என்று மேலிட தலைவர்கள் கருதினர். இதனால் அதிமுகவுடன் இணக்கமாக செல்லவே அவர்கள் விரும்பினர். அண்ணாமலைக்கும் தெரிவித்தனர். ஆனால் அண்ணாமலையோ சில நாட்களுக்கு முன்னர் சென்னை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜ தனித்துப் போட்டியிட வேண்டும். அவ்வாறு தனித்துப் போட்டியிடாவிட்டால், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்றார்.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், மேலிடத்தில் புகார் செய்தனர். உடனடியாக, அண்ணாமலையை அழைத்து அமித்ஷா கண்டித்தார். அதன்பின்னர் அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். ஆனால், அமித்ஷாவின் கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. கூட்டணி குறித்து அவர் அப்படி தெரிவிக்கவில்லை என்பதோடு, அதிமுகவுடன் கூட்டணி என்று அவர் சொன்னது தண்ணீரில் எழுதப்பட்டவை என்று கிண்டலடித்தார். இதுவும் மேலிட தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால், தமிழக பாஜவில் இருந்து சில மாதங்களாக ஒதுங்கியிருந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு, டெல்லி மேலிடம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சென்னை பாஜ நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் பாஜ 9 தொகுதிகளை குறி வைத்து வேலைகளை செய்து வருவதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் சொல்வதற்கு முக்கிய காரணம், தமிழக பாஜ தேர்தல் பணிக்கு எல்.முருகனை நியமித்துள்ளது என்பதை அதிமுகவுக்கும், பாஜ நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கவே அவரை அனுப்பி கூட்டம் நடத்த சொன்னதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் அமித்ஷாவை, எல்.முருகன் சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது தமிழக தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின்படி தமிழக தேர்தல் பொறுப்பாளராக எல்.முருகன் நியமிக்கப்படுவார் என்றும் அவருக்கு கீழ் தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழுதான் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் அண்ணாமலை அழைக்கப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அண்ணாமலையை ஓரங்கட்டும் பணிகளை மேலிடம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளை தொகுத்து, அதை இந்தியில் மாற்றி, அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி எம்பி தம்பிதுரை மூலம் வழங்கி புகார் செய்துள்ளதாகவும், இதனால் தேர்தலுக்கு முன்னதாக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது அதிமுக, பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜவில் இருந்து சில மாதங்களாக ஒதுங்கியிருந்த ஒன்றிய அமைச்சர்
எல்.முருகனுக்கு, டெல்லி மேலிடம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.The post நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அண்ணாமலையை ஓரங்கட்டும் டெல்லி தலைமை: எல்.முருகனுக்கு முக்கியத்துவம் வழங்குவதால் பாஜவில் பரபரப்பு appeared first on Dinakaran.
