ஆதிவாசி வாலிபர் கொலை வழக்கு; 13 பேருக்கு தலா 7 வருடம் சிறை: கேரள சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஆதிவாசி வாலிபர் மது அடித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 13 பேருக்கும் நேற்று மண்ணார்க்காடு சிறப்பு நீதிமன்றம் தலா 7 வருடம் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி சின்டேக்கி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மல்லன். இவரது மனைவி மல்லி. இந்த தம்பதியின் மகன் மது (30). மதுவுக்கு மனநல பாதிப்பு இருந்தால் வீட்டில் தங்குவது இல்லை. கடந்த சில வருடங்களாக வீட்டுக்கு அருகே உள்ள காட்டில் ஒரு குகையில் வசித்து வந்தார். இந்தநிலையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வந்தன. மது தான் திருடுவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி சிலர் குகையில் இருந்து மதுவை ஊருக்கு கொண்டு வந்து கட்டிப்போட்டு தாக்கினர்.

இதில் மது பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மண்ணார்க்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த உசேன், மரைக்கார், சம்சுதீன், பிஜு, அபூபக்கர், சித்திக், உபைது, நஜீப், ஜைஜு மோன், ராதாகிருஷ்ணன், சஜீவ், சதீஷ், ஹரிஷ் முனீர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நேற்று அறிவித்தது. 2 பேர் விடுவிக்கப்பட்டனர். தண்டனை பெற்ற 14 பேருக்கும் நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான உசேனுக்கு (55) 7 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மரைக்கார் (41), சம்சுதீன் (41), ராதாகிருஷ்ணன் (40), அபூபக்கர் (39), சித்திக் (46), உபைது (33), நஜீப் (41), ஜைஜு மோன் (52), சஜீவ் (38), சதீஷ் (43), ஹரிஷ் (42), பிஜு (45) ஆகிய 12 பேருக்கு தலா 7 வருடம் சிறையும், ₹1.05 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் 14வது குற்றவாளியான முனீருக்கு 3 மாதம் சிறையும், ₹500 அபராதமும் விதிக்கப்பட்டது.

The post ஆதிவாசி வாலிபர் கொலை வழக்கு; 13 பேருக்கு தலா 7 வருடம் சிறை: கேரள சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது appeared first on Dinakaran.

Related Stories: