தாவரவியல் பூங்கா சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க கோரி சிஐடியு., சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோர வியாபாரிகளுக்கு பாரபட்சமின்றி கடைகள் வழங்க கோரி சிஐடியு., சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையோரத்தில் வியாபாரிகள் பல ஆண்டு காலமாக சிறுசிறு கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். சமீப காலமாக நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து இந்த வியாபாரிகள் கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடைகளை அப்புறப்படுத்தினால் அந்த வியாபாரிகள் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகும். அப்பகுதியில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் பாரபட்சமின்றி கடைகளை வழங்க வேண்டும்.

அதுவரை அந்த வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு., சார்பில் ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் வினோத் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் வியாபார சங்கச் செயலாளர் ரபீக், நகராட்சி செயலாளர் சேகர், ஆட்டோ சங்கச் செயலாளர் யோகேஷ், உட்பட சாலை வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகராட்சி ஆணையர், மாவட்ட எஸ்பி., ஆகியோைர சந்தித்து மனு அளிக்கப்பட்டது. முடிவில் சாலையோர வியாபாரிகள் மாவட்ட பொருளாளர் கோகிலா நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Related Stories: