எண்ணும் எழுத்தும் கல்வியறிவு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு

கூடலூர்: மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க தமிழக அரசு முன்னெடுத்த புதிய திட்டமான எண்ணும் எழுத்துத் திட்டத்தில் மாணவர்களின் அடைதிறன் மற்றும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ரமேஷ் நேற்று கூடலூரில் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.   கொரோனா தொற்றுக்குப்பின் மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க தமிழக அரசு முன்னெடுத்த எண்ணும் எழுத்தும் புதிய திட்டம் இந்தியா முழுவதும் உற்று நோக்கக் கூடிய அளவில் சிறந்த திட்டமாக உருவாகியுள்ளது. மாணவர்களின் கற்றல் அடைதிறனில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை அமலில் உள்ள இத்திட்டத்தை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு அமல்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஏற்கனவே ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள இத்திட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவு திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பென்னை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து பாடந்துறை, முறம்பிலாவு, லோயர்பெக்கி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பென்னை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் உடன் இருந்தார்.

இதனைத்தொடர்ந்து பாடந்துறை மற்றும் குந்தலாடி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் மாணவர்களின் கற்றல்திறன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் தவறாமல் இணைய வழி தேர்வுகளை விடுப்பின்றி எழுத ஆசிரியர்கள் நுட்பத்துடன் கவனித்து மாணவர்களை தேர்வு எழுதச் செய்ய வேண்டும்.  எதிர்காலத்தில் கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களும் கணினி மயமாக ஆகும் நிலை உள்ளதால் அனைத்து மாணவர்களும் கணினி அறிவு பெற்றவர்களாக உயர வேண்டும். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்க ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஆய்வுகளின் போது தெரிவித்தார்.

Related Stories: