ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து ஊட்டியில் சிஐடியு சார்பில் பிரசார இயக்கம்

ஊட்டி: ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து சிஐடியு., விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் ஊட்டியில் நடந்தது. ஏப்ரல் 5ம் தேதி டெல்லியில் பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது.  அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை நியமனத்தில் ஒப்பந்தமுறை ஒழிக்கப்படுவதுடன் ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  ஒன்றிய அரசு சிறு, குறு மற்றும் மத்திய தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் நான்கையும் திரும்ப பெறுவதுடன், மின்சார திருத்த மசோதா 2022ஐ திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் வேலை, பணி பாதுகாப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.

உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி.,ஐ ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கான எக்சைஸ் வரியை குறைக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தில் அனைவருக்கும் 14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.  தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தவறான கொள்கையை கண்டித்தும் சிஐடியு., அனைத்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி டெல்லி பாராளுமன்றத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.

 இதுதொடர்பான கோரிக்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் சிஐடியு., சார்பில் ஊட்டியில் பிரச்சார இயக்கம் நடந்தது. தலைகுந்தா பகுதியில் துவங்கி எச்பிஎப்., பிங்கர்போஸ்ட், ஹில்பங்க், சேரிங்கிராஸ், ஏடிசி., உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. சிஐடியு மாவட்ட தலைவர் சங்கலிங்கம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் இயக்கத்தை துவக்கி வைத்தார்.  விவசாய சங்கத்தின் தாலுக்கா தலைவர் ராஜேந்திரன், தாலுகா செயலாளர் கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.  ஊட்டி பஸ் நிலையம் அருகே பிரச்சார இயக்கம் நிறைவடைந்தது. இதில் புட்டுசாமி, ராஜரத்தினம், ஆப்ரஹாம், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ராமன் நன்றி கூறினார்.

Related Stories: