கழிவுநீர் தேக்கத்தை சீரமைக்கக்கோரி அவிநாசியில் சாலை மறியல் போராட்டம்

அவிநாசி, மார்ச் 21: திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் ரோட்டில் சூளை பகுதியில் 448 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில் தெப்பக்குளம்போல தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் அமைக்கவில்லை. இதனால் பொது சுகாதாரம் பாதித்து, குடியிருப்பவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியடைவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து பெண்கள் உள்பட 600 க்கும் மேற்பட்டவர்கள் ஆவேசமாக திரண்டு, நேற்று காலை 10 மணி அளவில் சேவூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்து அவிநாசி போலீஸ் டிஎஸ்பி பவுல்ராஜ், அவிநாசி  தாசில்தார் சுந்தரம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு அதிகாரிகள், ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், விரைவில், குழாய்கள் மூலமாகவும்,  லாரிகளின் மூலமாகவும் கழிவுநீரை எடுத்துசென்று வெளியேற்றுவதாகவும்,  நிரந்தரமாக தீர்வு காண்பதற்காக, அரசு உரிய திட்ட மதிப்பீடு செய்து, 2, 3  மாதங்களுக்குள் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற உரிய நடவடிக்கை  எடுப்பதாகவும் அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர்.

மேலும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறுகையில், ‘‘அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் வெளியேற எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் அனைத்து வீடுகளின் கழிவுநீரும் பல மாதங்களாக குடியிருப்புகளுக்கு மத்தியில் சேறும், சகதியுமாய் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசு, புழுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவுகிறது.

குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். சிறுவர் சிறுமியர்கள் தேங்கி நிற்கும் சாக்கடை குழியின் ஆழம் தெரியாமல் அங்கு விளையாடுவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர், தாசில்தார், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றனர்.

Related Stories: