தமிழக அரசின் பட்ஜெட் கோவை தொழில்துறையினர் வரவேற்பு

கோவை, மார்ச் 21: தமிழக அரசின் பட்ஜெட்டில் கோவைக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் பட்ஜெட்டிற்கு கோவையை சேர்ந்த தொழில்துறையினர் வரவேற்பு அளித்துள்ளனர். கொடிசியா தலைவர் திருஞானம்   வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சிறு,குறு மற்றும்   நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. தொழில்   துறைக்கு 3,268 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 2,877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு   தொழிற்பயிற்சி நிலையங்களை திறன் மையங்களாக மாற்றும் திட்டம். 711   தொழிற்சாலைகளில் உள்ள 6.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம்   திட்டம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவர்.

இளைஞர்களுக்கு   தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்,   தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் அமைக்க 25 கோடி ஒதுக்கீடு. ரூ.77 ஆயிரம்   கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம். சென்னை, கோவை, ஓசூரில் டிஎன்டெக்   சிட்டி அமைத்தல், கோவை மருத்துவக்கல்லூரியில் ஒரு செவிலியர் கல்லூரி   மற்றும் விடுதியின் கூடிய புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி வசதி கட்டுமானம்,   கட்டிட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி பெற நடவடிக்கை, கோவை மெட்ரோ   ரயில் சேவைக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்க கூடியது.   மூலப் பொருள் விலை உயர்வுக்கு தீர்வு, அனைத்து சிறு,குறு மற்றும் நடுத்தர   தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீதம் வட்டி மானியம் என்பதை நீடித்தல்,   எலட்ரானிக் பொருட்கள் உற்பத்திக்கு என சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற   அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டது. இதனை மாநில அரசு கவனித்து தீர்வு காண   வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

தென்னிந்திய  பஞ்சாலை சங்கத்தின் (சைமா)  பொதுச்செயலாளர் செல்வராஜூ வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் முதல்வர்  பதவியேற்ற நாள் முதல் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு  ஊக்கம் அளிக்கும் வகையில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்கு  சைமா தலைவர் ரவிசாம்  முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை  தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில்  விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கோவையில் புதிய  சிப்காட்  அமைத்தல், 1800 கோடி ஒதுக்கி சிப்காட் மூலம் 1052 ஏக்கர் நிலம்   கையகப்படுத்தி முடிக்கப்படும் என்ற அறிவிப்பு உள்கட்டமைப்பு வசதிகள்   ஏற்படுத்த உதவும். இந்த திட்டம் செயலாக்கத்திற்கு வரும் போது ஜவுளி   பதனிடும் தொழில் உட்பட ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலிக்கும் உள்கட்டமைப்பு   வசதியை வழங்கும். கைத்தறி தரத்தை மேம்படுத்த 20 கோடி செலவில் 10 சிறு   கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்திய   தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், சந்தை இணைப்புகளுக்கும் உதவும்.   

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் 410 கோடி   மதிப்பில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். கங்கைகொண்டானில்   உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்பில் 1,500 பணியாளர்கள்   தங்கும் வகையில் தொழில்துறை குடியிருப்பு வசதி ஏற்படுத்த உள்ள அறிவிப்புகள்   வரவேற்கக்கூடியது. தொழிற்சாலை திறன் பள்ளிகள் திட்டத்திற்கு  ரூ.25 கோடி  ஒதுக்கீடு, கிருஷ்ணகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி  மதிப்பில்  தொழில் மையம் உருவாக்குதல், பெண் தொழிலாளர்களுக்கான ஸ்டார்ட்அப்  மிஷன்  தொடர்பான அறிவிப்பு, புதிய ஜவுளி கொள்கை வெளியிடப்படும் உள்ளிட்ட   அறிவிப்புகள் வரவேற்கக்கூடியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ேகாவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதுப்பிக்க 2,877 கோடி நிதி ஒதுக்கீடு. 54 பல்நோக்கு தொழில் கல்லூரிகள் அமைக்க 2,789 கோடி நிதி ஒதுக்கீடு. கோவையை மேம்படுத்த எழில் மிகு கோவை திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி சாலைகள், சுகாதார வசதி, தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிதி கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டு 1509 கோடியாக ஒதுக்கீடு. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 9 கோடி நிதி ஒதுக்கீடு.

வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி. இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தொழிற் பூங்காக்கள் அமைக்க குறைந்தபட்ச நில அளவு 2 ஏக்கர்களாக குறைக்கப்பட வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மற்றும் சொத்து வரி குறைக்க வேண்டும். 5 மற்றும் அதற்கு குறைவான ஆட்கள் பணியாற்றும் குறுந்தொழிற் கூடங்களுக்கு தொழில்வரி மற்றும் தொழில் முனைவோர் வரியில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பட்ஜெட்டில் அறிவித்த கோவைக்கான மெட்ரோ திட்டத்திற்கு 9 ஆயிரம் கோடி மற்றும் செம்மொழி பூங்காவுக்கான 172 கோடி ஒதுக்கீடும், பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த தனி திட்டம் அறிவிப்பு, எழில் மிகு கோவை திட்டம் அறிவிப்பு, குறு,சிறு தொழில் வளர்ச்சிக்கான 1,509 கோடி நிதி ஒதுக்கீடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி மருத்துவ உதவி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் பயிற்சி போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், கோவையில் குறுந்தொழில் பேட்டை அறிவிப்பு இல்லாதது, மின்கட்டணம் திரும்ப பெறும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு சிறு,குறு தொழில்கள் சங்கம் மாவட்ட துணை தலைவர் சுருளிவேல் கூறியிருப்பதாவது: சென்னை, கோவை மற்றும் ஓசூரில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம், கோவைக்கு மெட்ரோ ரயில், சிறப்பு திட்டத்தின் மூலம் தொழில் 4.0-க்கு ரூ.2877 கோடி ஒதுக்கீடு, தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மொபைல் உதவி மையம், மூலதன மானியம் 300 கோடி மற்றும் கடன் உத்தரவாதம் 100 கோடி ஒதுக்கீடு, கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அறிவிப்பு, எம்எஸ்எம்இ-க்கு மொத்த ஒதுக்கீடு ரூ.911.50 கோடி போன்றவைகள் வரவேற்கப்படுகின்றன.

எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஏற்கனவே கோவையில் ஒரு தொழிலாளர் தங்கும் விடுதி வரவிருக்கிறது, மற்ற மாவட்டங்களிலும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இது பற்றிய அறிவிப்பு இல்லை. டிஐஐசி கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 2017-ம் ஆண்டுக்கு முன்னர் வரி தொடர்பான வழக்குகளுக்கு பொது மன்னிப்புத் திட்டத்தைக் கோரினோம், அது அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: