ஊட்டி உருளைக்கிழங்கு விலை சரிவு

ஊட்டி, மார்ச் 19:  நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மழை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு வகையான மழை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாகவே நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு விலை கூடுதலாக கிடைக்கும். அதுவும் உருளைக்கிழங்கிற்கு எப்போதுமே விலை அதிகமாக கிடைக்கும். சாதாரணமாக கடைகளில் கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்னர்.

இந்நிலையில், கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றிற்கு ரூ. 50 வரை கிடைத்து வந்தது. இந்நிலையில் கோலார் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது உருளைக்கிழங்கு அதிக அளவு வரத் துவங்கியுள்ளன. இந்த கிழங்கு ரூ.15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கும் அதிகளவு வர துவங்கியுள்ளதால் நீலகிரி உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.20 முதல் 25 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேசமயம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ஒன்று 15 முதல் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: