உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச பல் மருத்துவ முகாம்

கூடலூர், மார்ச் 19:  இந்தியா பல் மருத்துவ சங்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை மற்றும் டிவிஎஸ் சீனிவாசா சேவைகள் நிறுவனம் ஆகியவை சார்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீ மதுரை மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகளில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் இலவச பல் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் வாய்வழி ஆரோக்கியம் என்ற இலக்கை அடைய இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு முகாம்களின் ஒரு பகுதியாக இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நேற்று சோலாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நடத்தப்பட்ட பல் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு  முகாமில் பல் மருத்துவர்கள் கவிதா, ஐஸ்வர்யா, கீர்த்தி, ரெமோரியோ, முருகானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐந்து முதல் பத்து வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசோதனைகள் செய்து பற்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.டிவிஎஸ் சீனிவாசா சேவைகள் குமுமத்தின் கள நடத்துனர் சுந்தர்ராஜன், சமுதாய மேம்பாட்டு இயக்குனர் திலகரணி மற்றும் பினு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: