தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம்

ஊட்டி, மார்ச் 17: ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலை மற்றும் நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகள் மீண்டும் அகற்றப்பட்டன. சர்வதேச சுற்றுலா நகரமாக ஊட்டி உள்ளது. இங்கு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவைகளை காண நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தாவரவியல் பூங்காவிற்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த சுற்றுலா தலங்கள் செல்லும் நடைபாதையிலும், சாலையோரங்களிலும் உள்ளூர் மக்கள் பலரும் தள்ளு வண்டிகளை வைத்து சிறிய கடைகளை நடத்தி வருகின்றனர்.

இதில், பழங்கள், பொம்மைகள், வெம்மை ஆடைகள், கைவினை பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர கடைகள் இல்லாத நிலையில், தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதிகளில் உள்ள அனைத்து நடைபாதைகளிலும் கடைகள் வைத்துள்ளனர். இந்த நடைபாதை கடைகளால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது கடைகளை அகற்றுவது வழக்கம். பின் மீண்டும் கடைகள் முளைப்பதுமாக இருந்தது. இந்நிலையில், தாவரவியல் பூங்கா பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்த கடைகள் கட்டி தருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது 55 கடைகள் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அவை திறக்கப்படவில்லை.

இதனால், சாலையோர வியாபாரிகள் தற்காலிகமாக நடைபாதைகளில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். சிலர் தள்ளு வண்டிகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாக கூறி இந்த கடைகளை கடந்த 1ம் தேதி நகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பகுதியில் நடைபாதை வியாபாரிகள் கடைகளை வைத்தனர். இந்நிலையில், நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

போலீசார் பாதுகாப்புடன் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள அனைத்து நடைபாதை கடைகள், தள்ளு வண்டி கடைகள் அகற்றப்பட்டது. சேரிங் கிராஸ் முதல் பூங்கா நுழைவு வாயில் வரை வைக்கப்பட்ட அனைத்து கடைகளையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும், மதுவானா சந்திப்பு வரையில் உள்ள சாலையோர கடைகள் அகற்றப்பட்டது. மேலும், வேலிவியூ மற்றும் மிஷனரி ஹில் போன்ற பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நகரின் அனைத்து பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: