ஊட்டியில் கால நிலையில் திடீர் மாற்றம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம்

ஊட்டி, மார்ச் 17:  நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊட்டியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழையும் பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை வட கிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை பெய்தது. மழை குறைந்தவுடன் உறைப்பனி பொழிவு அதிகரித்து. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்  ஊட்டியில் உறைப்பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பனி பொழிவு காணப்பட்டது.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல நாட்கள் ஐந்து டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை சென்றது. உறைபனி தாக்கம் மூன்று மாதமும் நீடித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் கருகின. இதனால், தேயிலை தொழில் பாதிக்கப்பட்டது. அதே போல் சில பகுதிகளில் காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அதேபோல சுற்றுலா பயணிகளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்துள்ளது.நேற்று ஊட்டியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மேகம் சூழ்ந்து காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழையும் காணப்பட்டது. பனி குறைந்த நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர் குறைந்தே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து நேற்று ரம்மியமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மலும், மழை பெய்தால், பனியார் கருகிய தேயிலை செடிகள் துளிர்க்க வாய்ப்புள்ளதால், விவசாயிகளும் மழை வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related Stories: