வைப்பு நிதிக்கு கூடுதல் போனஸ் தருவதாக புதுவை பெண் உள்பட 8 பேரிடம் ரூ.12 லட்சம் நூதன மோசடி 6 பேர் கும்பல் மீது வழக்கு

புதுச்சேரி,  மார்ச் 10: புதுச்சேரி, லெனின் வீதி,  ஏழை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமு (60), செக்யூரிட்டி. இவரது  மனைவி பார்வதி (56). இவர் குயவர்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் நிதி  நிறுவனம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் குறுகிய காலத்தில் கூடுதல்  போனஸ் தொகை பெறும் வகையில் கடந்த 2021ம் ஆண்டில் ரூ.4 லட்சம் வைப்பு தொகை  செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஓராண்டு காலக்கெடு முடிந்த நிலையில்  2022 செப்டம்பரில் அந்நிறுவனத்துக்கு மகனுடன் சென்ற பார்வதி வைப்பு தொகை  கணக்கை முடித்து முதிர்வு (போனஸ்) தொகையுடன் பெற முயன்றபோது அலுவலகம்  பூட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர்  அந்நிறுவனத்தின் மண்டல மேலாளரான புதுச்சேரி, கன்னியகோயில் டிடிஆர் நகரில்  வசிக்கும் ஜீவா கணேஷ் (34) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது,  இவ்விவகாரம் தொடர்பாக மேலாளர் பெருமாள், கலெக்சன் ஏஜெண்ட் ஸ்டெல்லாவிடம்  கேட்டுக் கொள்ளுமாறு கூறினாராம். பார்வதி, மேற்கண்ட  இருவரையும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து நிதி நிறுவனம் தொடர்ந்து மூடிக் கிடக்கவே வேறுவழியின்றி மண்டல  மேலாளர் ஜீவா கணேசை, அவரது வீட்டிற்கு தனது கணவர் மற்றும் மகனுடன் சென்ற  பார்வதி, வைப்பு நிதியை கேட்டபோது அந்நிறுவனம் மூடப்பட்டு விட்டதாகவும்,  இதுதொடர்பான தகவல்களுக்கு உரிமையாளர்களிடம் பேசிக் கொள்ளுமாறு அவர்களை  அசிங்கமாக திட்டி அனுப்பினாராம். அதன்பிறகு இந்நிதி நிறுவனம் தொடர்பாக  விசாரித்தபோது அது மோசடி நிறுவனம் என்பது தெரியவந்தது.

தன்னிடம் ரூ.4  லட்சம் வைப்பு தொகை மட்டுமின்றி புதுச்சேரியைச் சேர்ந்த முத்துவேல்,  தேவராஜ், முருகன் உள்ளிட்ட 8 பேரிடம் மொத்தம் ரூ.12 லட்சம் வரை பணத்தை  வைப்பு தொகையாக இந்நிறுவனம் பெற்று மோசடி செய்து தலைமறைவானது அம்பலமாகவே  உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முயன்ற முயற்சியும் தோல்வியில் முடிந்தது.  இந்த பணமோசடி தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில்  பார்வதி நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில் தனது வைப்பு தொகையான  ரூ.4 லட்சத்தை மீட்டுத்தருமாறு ஏற்கனவே தங்களிடம் புகார் அளித்துள்ளதை  சுட்டிக் காட்டியுள்ள பார்வதி, வாக்குறுதி அளித்ததன்பேரில் இதுவரை  காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் எனவே உடனே மோசடி நபர்கள் மீது  சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத் தருமாறு  முறையிட்டிருந்தார்.

அதன்பேரில் நிதி நிறுவன உரிமையாளர்களான  தங்கப்பழம், ஜெயவேல், பிரேம்ஆனந்த் மற்றும் மேலாளர் பெருமாள், கலெக்சன்  ஏஜெண்ட் ஸ்டெல்லா, மண்டல மேலாளரான ஜீவா கணேஷ் ஆகியோர் மீது 420 (மோசடி)  பிரிவின்கீழ் வழக்குபதிந்த போலீசார் தலைமறைவான கும்பலை வலைவீசி தேடி  வருகின்றனர். இந்நிறுவனம் சேலத்தை தலைமையிடமாக ெகாண்டு செயல்பட்டது  தெரியவந்துள்ள நிலையில் அங்கு ஜீவா கணேஷ் பதுங்கியிருக்கலாம் என்பதால்  தனிப்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளது. இவரை பிடித்தால்தான்  மற்றவர்களின் விபரம் தெரியவரும் என்பதால் கைது நடவடிக்கை முடுக்கி  விடப்பட்டுள்ளது.

Related Stories: