சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா

சாயல்குடி, அக். 1: சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் பழமையான அரக்காசு அம்மா தர்ஹாவில் இந்து&முஸ்லீம் மக்கள் இணைந்து சந்தன காப்பு கந்தூரி திருவிழா கொண்டாடினர். சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் சுமார் 310 ஆண்டு பழமையான அரக்காசு அம்மா தர்ஹா உள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சந்தனகாப்பு கந்தூரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த வாரம் தர்ஹாவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலையில் நடந்த கந்தூரியில் உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு,

இந்து&முஸ்லீம் மக்களின் சிறப்பு கூட்டு பிராத்தனை நடந்தது. பிறகு தர்ஹாவில் புனித சந்தனம், அக்தர் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பிறைவடிவ பச்சை போர்வை போற்றப்பட்டு, மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு பொதுவாக நாட்டு கோழி, ஆடு பலியிடப்பட்டு சமத்துவ அன்னதானம் வழங்கப்பட்டது. சாயல்குடி பகுதியில் சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவில் கடலாடி, கமுதி, முதுகுளத்து£ர், சாயல்குடி, கீழக்கரை, ஏர்வாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: