நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ஊட்டி, செப். 30: நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் பருவமழையின் ேபாது  கூடலூர் - சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அப்பகுதியில் நேற்று தமிழக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சீரமைக்கப்பட்ட பகுதியில் புதிய தொழில்நுட்ப முறையை கொண்டு மண் ஆணிகளை பொருத்த திட்டமிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே சாலையில் ஏற்பட்ட விரிசல்களை பார்வையிட்டார். தலைக்குந்தா அருகே அமைக்கப்பட்ட சாலை தடிமன் மற்றும் சமமான நிலையில் சாலை உள்ளதா? எனவும் பார்வையிட்டார். தொடர்ந்து தலைக்குந்தா பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர், ஊட்டி பிங்கர்போஸ்ட் காக்காதோப்பு பகுதியில் ரூ.33 கோடியில் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். மேலும், ஊட்டி நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் விரிவாக்கம் செய்து கட்டப்பட்ட பாலம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அம்ரித், தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், கோட்ட பொறியாளர்கள் செல்வம், குழந்தைராஜ், கூடலூர் நகராட்சி கவுன்சிலர் பரிமளா, முன்னாள் அரசு கொறடா முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, கூடலூர் ஆர்டிஓ, சரவணகண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: