திருமயம், செப்.29: திருமயம் வட்டார வளமையத்தில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் வெகுவாக பாராட்டினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி செப்டம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் தங்கள் ஒன்றிய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர்.