பேக்கரியை அடித்து நொறுக்கியமர்மநபர்கள் மீது நடவடிக்கை கோரி காவல்நிலையம் முன்பாக தர்ணா

சத்தியமங்கலம், செப்.24: திமுக துணைப் பொதுச் செயலாளரும்,  நீலகிரி எம்பியுமான ராசாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து இந்து முன்னணியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் நடத்திய கடையடைப்பு போராட்டத்தின் போது கோட்டுவீராம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த பேக்கரியின் ஷோகேஸ் கண்ணாடிகளை மர்ம நபர்கள்  அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பேக்கரியை அடித்து உடைத்து நொறுக்கிய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. எனவே உடனடியாக பேக்கரியை அடித்து உடைத்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி (பொறுப்பு) நீலகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தர்ணா போராட்டத்தில் திமுக முன்னாள் கவுன்சிலர் சபியுல்லா, சத்தி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவக்குமார் மற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர்பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: