விதிமுறையை மீறி இயங்கிய 35 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலம் செப். 23:  சேலம் மாவட்டத்தில் விதிமுறையை மீறி இயங்கிய 35 சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாயப்பட்டறைக்கு இடத்தை வாடகைக்கு விட்டால் உரிமையாளர் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில் தொழிற்சாலைகளில்இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் சாய்யபட்டறை கழிவுகள் கலப்பதால்திருமணிமுத்தாறு மாசு அடைந்து விட்டதாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதிகள், திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை விட்டு மாசு அடைவதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை வெளியேற்றிய 77 சாயப்பட்டறைகள், 10சேகோ ஆலைகளுக்கும், சுற்றுசூழல் இழப்பீட்டு தொகையாக ரூ.5.41 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.1.50 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வைகயில் பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் துறை, நிதித்துறை, உள்ளாட்சித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து திருமணிமுத்தாற்றை கண்காணிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சேலம் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் திருமணி முத்தாற்றில் கழிவு நீரை திறந்து விடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறையை கண்டறிந்து, அந்த பட்டறையை மூடியும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறமால், சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் மற்றும் உதவி பொறியாளர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர். அதில், சேலம் மாவட்டம் மேச்சேரியில் மாசுகட்டுபாடு வாரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 18 சாயப்பட்டறைகள், சேலம் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 14 சாயப்பட்டறைகள் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து,மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமலும், சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமலும் கழிவுநீரை வெளியேற்றிய காரணத்திற்காக, இந்த 35 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பை துண்டிக்க மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் செந்தில்விநாயகம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து விதிமுறையை மீறி இயங்கிய  35 சாயப்பட்டறையின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதுகுறித்து மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் கூறுகையில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதிபெறாமல் , சாயப்பட்டறையின் கழிவுநீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அந்த பட்டறை மூடப்படும். கழிவுநீரினை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்படும். அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு வாடகைக்கு அளித்தால், அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories: