பாளை. சவேரியார் கல்லூரி 100வது ஆண்டு துவக்க விழா சாதி, மதம், இனம் கடந்து கல்வி வழங்குவது ஏசு சபை சபாநாயகர் அப்பாவு பேச்சு

நெல்லை, செப். 10: சாதி, மதம், இனம் கடந்து அனைவருக்கும் கல்வி வழங்குவது ஏசு சபைதான் என்று பாளை. தூய சவேரியார் கல்லூரி நூற்றாண்டு துவக்க விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு பேசினார். பாளையங்கோட்டையில் ஏசு சபை சார்பில் பாரம்பரியமிக்க தூய சவேரியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் நூற்றாண்டு துவக்க விழா, கல்லூரி வளாக கலையரங்கில் நடந்தது. கல்லூரி கலைமனைகளின் அதிபர் ஹென்றிஜெரோம் தலைமை வகித்தார். மதுரை ஏசு சபை தலைவர் டேனிஸ்பொன்னையா, கல்லூரி முதல்வர் மரியதாஸ், செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் நூற்றாண்டு விழா லோகோ வெளியிடப்பட்டது.

விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: பாளை சேவியர் கல்லூரி நூற்றாண்டை தாண்டி எப்படி வந்துள்ளது என தற்போது படிக்கும் மாணவ சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே குறிப்பாக தென் இந்தியாவில் அதிக கல்வி நிறுவனங்களை கொண்ட நகரம், நம் பாளையங்கோட்டைதான். இங்கு அதிகமான கல்வி நிறுவனங்கள் இருப்பதால் தென் இந்தியாவின் ஆக்‌ஸ்போர்டு என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் ஏசு சபைதான். சாதி, மதம், இனம் கடந்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கும் ஏசு சபைதான் காரணம். இந்த சபை மாநிலம் முழுவதும் வைத்துள்ள கல்வி நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளது. 65 சதவீத தலைமுறையினர் படிப்பதற்கு ஏசு சபையே காரணமாகும்.

ஆனாலும் திராவிட இயக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது. ஏழை எளிய சாமானிய மக்கள் கல்வி கற்க சமூக நீதியை நிலைநாட்டியது திராவிட இயக்கம்தான். அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம், அவரின் வழி வந்த அண்ணா, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போது நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதே கொள்கையை பின்பற்றி வருகின்றார். பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் (புதுமை பெண்கள் திட்டம்) வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

திமுகவின் ஆட்சியில் 75 சதவீதம் பேர் பட்டம் பெறும் நிலை உருவாகும். அறிவுசார் வாய்ப்பு வழங்கும் கல்லூரிகள் எவை என ஆய்வு செய்யப்பட்டதில் இந்திய அளவில் 47 கல்லூரிகள் கண்டறியப்பட்டது அதில் சேவியர் கல்லூரியும் ஒன்று, என்றார். விழாவில் ஞானதிரவியம் எம்பி, எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ ஐயப்பன் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ- மாணவிகள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளையை மாற்றிய எம்எல்ஏ

நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசுகையில், மாப்பிள்ளை அப்துல்வகாப் என்பதற்கு பதிலாக மாப்பிள்ளை அப்பாவு (தமிழக சட்டமன்ற சபாநாயகர்) என தவறுதலாக அழைத்தார். இதுபோல் இருமுறை தவறுதலாக குறிப்பிட்டார். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ சிரித்துக்கொண்டே சமாளித்தார்.

Related Stories: