பிதர்காடு அரசு பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலூர், செப்.4:  பந்தலூர் அருகே பிதர்காடு அரசு பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரித்தா தலைமை தாங்கினார். அரசு சிறார் மருத்துவ குழு மருத்துவர் சியாம், பிதர்காடு சுகாதார ஆய்வாளர் உதய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராகேஷ் பேசும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தினமும் உணவில் காய்கறி, கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்றார். அம்பலமூலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நவீன்குமார் பேசும்போது, மாணவர்கள் காலை, மாலை பல் துலக்க வேண்டும். உடல் சுத்தம் பேணுதல் அவசியம். வாரம் ஒருமுறை நகங்கள் வெட்ட வேண்டும். ஆடைகளை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும் என்றார். ஆயுஷ் மருத்துவர் காரு சந்தானம் பேசும்போது, 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவில் 9 மணிக்குள் தூங்க செல்ல வேண்டும். காலையில் எழுந்து படிக்க வேண்டும். சுறுசுறுப்புடன் இருக்க உடற்பயிற்சி அவசியம் என்றார்,

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, குழந்தைகள் அதிகம் இனிப்பு உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனி சாப்பிட கூடாது, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: