யூரியா உரம் தருவதற்கு டிஏபி வாங்க தனியார் உரக்கடைகள் நிர்ப்பந்தம்

நெல்லை, ஆக. 27: நெல்லை  மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு  தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் டேவிட் டென்னிசன் மற்றும்  அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் வருமாறு: தனியார்  உரக் கடைகளில் உரங்களின் விலைப் பட்டியல் வைப்பதில்லை. ஒரு சில கடைகளில்  பலகை வைத்து விட்டு அப்புறப்படுத்தி விடுகின்றனர். எனவே சுவரில் எழுத  ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு பதிலளித்த கலெக்டர், ‘‘ நெல்லை  மாவட்டத்தில் அனைத்து உரக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளனர்.  எந்தக் கடையில் பட்டியல் இல்லை என்பதை குறிப்பிட்டு தெரிவித்தால் நடவடிக்கை  எடுக்கப்படும்.’’ என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்  தலைவர் பெரும்படையார்: திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளுக்கு போதுமான  அளவு யூரியா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  தனியார் உரக்கடைகளில் டிஏபி  வாங்கினால் தான் யூரியா தருவோம் என கட்டாயப்படுத்துகின்றனர். எனவே யூரியா  தேவையான அளவு  ஒதுக்கீடு செய்தால் இந்தப் பிரச்னை எழாது. கலெக்டர்:  கடந்த முறை இந்த பிரச்னை எழுந்த போது தூத்துக்குடியிலிருந்து ஸ்பிக்  நிறுவனத்திடம் கேட்டு யூரியா ஒதுக்கீடு பெற்றோம். எனவே தட்டுப்பாட்டை போக்க  நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி சுப்பையா: 2019ம் ஆண்டு பயிர்க்  காப்பீடு தொகை செலுத்தியும், இன்சூரன்ஸ் பணம் இதுவரை வந்து சேரவில்லை.  அதிகாரிகள் தவறான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விட்டனர். காப்பீட்டுத் தொகை  செலுத்தியும் பணம் வரவில்லை. எனவே இன்சூரன்ஸ் தொகையை பெற்றுத் தர வேண்டும்.

தேசிய தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சொரிமுத்து: களக்காடு முண்டந்துறை வனத்துறை  அலுவலகத்தில் இருந்த சந்தன மரத்தை யாரோ வெட்டிச் சென்று விட்டனர். இது  வனத்துறை அதிகாரிகளுக்கே தெரியவில்லை. புளியரை செக் போஸ்டில் வைத்துத் தான்  பிடிபட்டது. அதற்கு பிறகே அதிகாரிகளுக்கு தெரிந்தது. ஆனால்  சொரிமுத்தையனார் கோயிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆடு கொண்டு  போகக் கூடாது. பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்று வனத்துறையினர் தடை  விதிக்கின்றனர்.

நாங்குநேரி விவசாயிகள் பேசுகையில், ‘‘ வடகிழக்கு  பருவமழை காலத்திற்கு முன்னதாக குளங்களின் மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றனர். ராதாபுரம் பகுதி  விவசாயிகள் பேசுகையில், ‘‘ராதாபுரம் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு  சொந்தமான 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களில் 3 ஆயிரதது 500 விவசாயிகள் குத்தகைக்கு விவசாயம்  செய்து வருகின்றனர். இதற்காக விவசாயிகள் இதுவரை  குத்தகை செலுத்தி வந்தனர்.  ஆனால் தற்போது குத்தகை வாங்க மறுக்கின்றனர். எங்கள் அனைவரையும் காலி  செய்துவிட்டு, பொது ஏலத்தில் குத்தகை விடுவோம் என்கின்றனர். நாங்கள் தரிசாக  கிடந்த நிலத்தை பண்படுத்தி, கிணறு அமைத்து, தென்னை மரங்களை வளர்த்து  மகசூல் எடுக்கும் நேரத்தில் இப்படி பொது ஏலம் விடுவது எந்த வகையில்  நியாயம்? இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனர்.

இதற்கு  பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா, ‘‘இந்து சமய  அறநிலையத்துறை அவ்வாறு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தான் பொது ஏலம்  விடப்படுகிறது.’’ என்றார். பின்னர் பேசிய கலெக்டர், ‘‘இது தொடர்பாக  சேரன்மகாதேவி சப்-கலெக்டர்,  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர்  அடங்கிய குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காணப்படும்.’’ என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில்  தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர்  (தரக்கட்டுப்பாடு) ஆரோக்கிய அமல ஜெயன், தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர்  மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் களையெடுப்பு

தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில்,, ‘‘  நெல்  கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு மூடைக்கு ரூ.40 வசூல் செய்கின்றனர். அங்கு மூடை தூக்குபவர்களுக்கு கூலி கொடுப்பதில்லை. மூடைகளை   எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு வாடகையை குறைத்துத் தருகின்றனர், இதனால் தான் மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்கிறோம் என்ற   புகார்கள் எழுகின்றன. எனவே நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு   பைசா கூட கொடுக்க வேண்டாம் என்று கூறுவது சாத்தியம் அல்ல. இதற்காக ஒரு   கொள்முதல் நிலையத்தை மூடினால், பிற கொள்முதல் நிலையங்களில் தவறுகள்   நடக்கின்றன. எனவே ஒட்டு மொத்தமாக அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் பணம் பெறுவதை களையெடுக்க வேண்டும்.’’ என்றனர். இதற்கு பதிலளித்த  கலெக்டர்,  ‘‘ஏற்கனவே இதுகுறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி வரும்  காலங்களில்  தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.

Related Stories: