தென்னை பயிரிடும் பரப்பு 1 லட்சம் ஏக்கராக அதிகரிக்கும் என அமைச்சர் தகவல் கோவையில் ரூ.5 கோடியில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்: காணொலி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்

கோவை, ஆக.26: தமிழக முதலமைச்சர் திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் காணொலி காட்சி வாயிலாக, கோவை மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை துவங்கி வைத்தார்கள். கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்நேரலை நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.  பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கயிறு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்களில் இந்நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.13 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.9.06 கோடி அரசு மானியத்துடன் கொசிமா புதிய தனியார் தொழிற்பேட்டையும், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி ஆகிய திட்டங்களுக்கு முதலமைச்சர்  அடிக்கல் நாட்டி உள்ளார்.

இதுபோன்ற சிறப்பான திட்டங்களை கோவை மாவட்டத்திற்கு வழங்கிய முதலமைச்சருக்கும், சிறு குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சருக்கும் என் மனமார்ந்த நன்றியினை கோவை மாவட்ட மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில்  88 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை  பயிரிடும் விவசாயிகள் உள்ளனர். தற்போது துவங்கப்பட்டுள்ள இம்மேம்பாட்டு நிறுவனம் மூலம்  தென்னை பயிரிடும் பரப்பு 1 லட்சம் ஏக்கருக்கு அதிகமாகி தென்னையின் உற்பத்தியை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரியத் திட்டமாகும்.  

இத்திட்டம் தென்னை விவசாயிகளின் பல ஆண்டுகள் கோரிக்கையாக இருந்தது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, பின்னர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு 5  மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப்,தமிழ்நாடு கயிறு வாரிய தலைவர் நாகராஜன், சிட்கோ தொழில்நுட்ப வல்லுநர் பாண்டியராஜன், மாவட்ட தொழில் மைய  பொது மேலாளர் திருமுருகன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: