பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

கோவை, மே 19: கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 ஆகிய பொதுத்தேர்வு எழுதி தோல்விடையந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகளை சேர்ந்த 3,302 மாணவர்கள், 4,930 மாணவிகள் என 8,232 பேர் எழுதினர். இவர்களில் 2,971 மாணவர்கள், 4,714 மாணவிகள் என மொத்தம் 7,685 பேர் தேர்ச்சி பெற்றனர். 547 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதே போல், 17 மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மொத்தம் 2,027 பேர் தேர்வு எழுதியதில் 1,892 பேர் தேர்ச்சி பெற்றனர். 135 பேர் தேர்ச்சி பெறவில்லை. மேலும், பத்தாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 158 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,958 மாணவர்கள், 6,190 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 148 பேர் எழுதினர்.

இவர்களில், 10 ஆயிரத்து 824 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,324 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. தவிர, பிளஸ்2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, கோவை அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளில் துணை தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். பாடவாரியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். மேலும், மாதிரி தேர்வுகள் நடத்தி துணை தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: