ஓடும் ரயிலில் இருந்து குதித்த ரிக் அதிபர் பலி

சேலம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சீதாராமம்பாளையம் பழனிஆண்டவர் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (55), ரிக் வண்டி அதிபர். இவர் நேற்று அதிகாலை, கர்நாடக மாநிலம் ஹூப்ளி செல்வதற்காக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு, தன்னுடன் பணியாற்றும் தொழிலாளர்களுடன் கொச்சுவேலி-ஹூப்ளி எக்ஸ்பிரசில் பயணிக்க டிக்கெட் எடுத்துக் கொண்டு, அந்த ரயிலில் ஏற 5வது பிளாட்பார்ம்மிற்கு சென்றுள்ளார்.

அங்கு ரயில் வந்ததும், பின்பகுதியில் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் முருகவேல் ஏறியுள்ளார். ரயில் புறப்பட்டுச் செல்லும் போது, முன்பகுதியில் இன்ஜின் அருகேயுள்ள முன்பதிவில்லா பெட்டியில் ஏறுவதாக சென்றிருந்த சக தொழிலாளர்கள் ரயிலில் ஏறாமல் பிளாட்பார்ம்மில் நிற்பதை பார்த்துள்ளார். உடனே கீழே இறங்குவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி விழுந்தார். அதில், பிளாட்பார்ம்மில் பின்தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் ஓடிவருவதற்குள் முருகவேல் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார், முருகவேலின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: