வேதாரண்யம் அருகே மழை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா தேரோட்டம்

வேதாரண்யம், ஆக.10: வேதாரண்யம் அருகே மழை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் அமைந்துள்ள மழை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று மழை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வந்தனர்.

அப்போது அம்மன் மீது மஞ்சள் நீரை தெளித்து பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் பால் குடம் காவடிஎடுத்தும் வந்தனர். பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: